After the numerous compliments on the tamil semozhi manaadu, I got to read this mail on the parattu vizhas that are being periodically carried out for our dear CM. This is more a mockery on the way the parattu vizha proceeds.
I had a good time reading this foward. Hope you enjoy it!!
ஏறக்குறைய அனைத்து தலைப்புகளிலும் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தி முடித்து விட்டதால் இப்பொழுது கருணாநிதியை எதற்காக பாராட்டுவது என்று “கருணாநிதியை பாராட்டும் துறையின்“ அமைச்சர் ஜெகதரட்சகனும், துணை அமைச்சர் துரை முருகனும் உட்கார்ந்து யோசிக்கின்றனர்.
திடீரென்று அவர்களுக்கு தோன்றிய யோசனை, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த டெண்டுல்கரை பாராட்டிய கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தினால் என்ன என்று யோசனை செய்ததும், அருமையான ஒரு யோசனையாக தோன்ற, உடனடியாக விழா ஏற்பாட்டில் இறங்கினர்.
விழாவுக்கு டெண்டுல்கரை அழைப்பது என்று முடிவெடுக்கப் பட்டது.
டெண்டுல்கரை அழைக்கும் பொறுப்பு வி.சி.குகநாதனிடம் ஒப்படைக்கப் பட்டது.
ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் தொடரில் இருந்த டெண்டுல்கர் வர இயலாது என்று தெரிவித்ததும், சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேயைத் தொடர்பு கொண்டு, டெண்டுல்கரை விழாவுக்கு அழைத்ததும், டெண்டுல்கர் உடனடியாக ஒப்புக் கொண்டார். இனி விழா காட்சிகள்.
விழாவுக்கு, வழக்கமான ஜால்ரா கம்பேனிகளான ரஜினிகாந்த், கமலஹாசன்,
ஜெகதரட்சகன், துரைமுருகன், வாலி, வைரமுத்து, ஆகியோர் வருகை
தந்திருந்தனர். டெண்டுல்கர் ஒன்றுமே புரியாமல் பேந்த பேந்த விழித்துக்
கொண்டு உட்கார்ந்திருந்தார்.
முதலில் விழாவுக்கு தலைமையேற்று, ஜெகதரட்சகன் பேசினார்.
“திருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும் என்பார்கள். அது பொய் வாக்கு. என்
தலைவனை பாடப் பாட வாய் மட்டுமல்ல, என் உடலே மணக்கிறது.
எங்கோ தெருவில் ஏழையாய் ஒரு இன்ஜினியரிங் காலேஜும், மெடிக்கல் காலேஜும் நடத்திக் கொண்டிருந்த என்னை இன்று மந்திரியாக்கி அழகு பார்தது என் தலைவன் தான்.
இந்தியாவிலே எங்கேயாவது ஒரு இடத்திலாவது முதலமைச்சரின் தொகுதியிலே கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறதா ?
ஆனால் என் தலைவனின் தொகுதியிலே கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறது.
இருபதுக்கு இருபது கிரிக்கேட் போட்டி நடைபெறும் நாட்களில் என் தலைவன், சட்டமன்றத்துக்கு செல்வதைக் கூட தவிர்த்து விட்டு டிவி முன்னால் உட்கார்ந்திருப்பார் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ?
செம்மொழி மாநாடு நடைபெறும் கொடீசியா அரங்கிலே மாநாட்டு தொடங்கும் முன், அங்கே ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்தி விட்டுத்தான் மாநாட்டை தொடங்க வேண்டும் என்பதை இன்றைய தினத்திலே என் தலைவனிடம் கோரிக்கையாக வைக்கிறேன்.
அந்த விழாவிலே மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆடும் நாட்டிய நங்கைகளை அரங்கத்திலே கிரிக்கெட் போட்டி நடைபெறும் வேளையில் ஆட அனுமதிக்க வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறேன். “
அடுத்து துரை முருகன். “ அப்போல்லாம், இந்தி எதிர்ப்பு போராட்ட காலம்.
நானு, தலைவரு எல்லாம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துலே கலந்து கிட்டு
சிறையிலே இருந்தப்போவே, சிறைக்குள்ளேயே கிரிக்கெட் விளையாடியிருக்கோம் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
கழகத்தில், இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி போல, கிரிக்கெட் அணியும் ஒன்று உருவாக்க வேண்டும் என்பதை இந்த நேரத்திலே வேண்டுகோளாய் வைக்கிறேன். அந்த கிரிக்கெட் அணிக்கு துணை முதல்வரே தலைமை தாங்க வேண்டும் என்பதையும் வேண்டுகோளாய் வைக்கிறேன்.
தலைவருக்கு கிரிக்கெட் விளையாட்டில் இருந்த ஆர்வத்தின் காரணமாகவே,
சட்டசபை கலவரத்தில், பட்ஜெட் புத்தகங்கள் அவர் மீது தூக்கி வீசப்பட்ட
போதெல்லாம் அருமையாக கேட்ச் பிடித்து தன் விளையாட்டுத் திறமையை
வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படித்தாலும்
தலைவர் கிரிக்கெட் விளையாட்டில் சூரர்.
ஆனால் கான்வென்ட்டில் படித்த சில திமிர் பிடித்தவர்களுக்கு, கிரிக்கெட்
என்றால் என்னவென்று தெரியுமா ? டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தாலும் என் தலைவரைப் போல இரண்டு மனைவிகள் உண்டா அவருக்கு. என் தலைவரின் சாதனைகளுக்கு முன்னால் டெண்டுல்கரின் இரட்டைச் சதம் ஜுஜுபி என்று சொல்லிக் கொள்கிறேன்.“ (இதைக் கேட்டதும் கருணாநிதி விழுந்து விழுந்து சிரிக்கிறார்.)
அடுத்து வாலிபக் கவிஞர் வாலி.
“ கிரிக்கெட்டு கிரிக்கெட்டு
உன் குடும்ப பிரச்சினைய நீ சரிக்கட்டு !
நீ நடந்தாலே ஜல்லிக்கட்டு
தேர்தல்ல நீ நடத்துவ மல்லுக்கட்டு
உன் விழாவுக்கு நான் வந்திருக்கேன் மெனக்கெட்டு..
உன்னைப் பார்த்ததும் என் மனசு ஓடுது தறிக்கெட்டு
அரசியல் உனக்கு ஒரு விளையாட்டு
உனக்காக நான் பாடுறேன் தமிழ்ப்பாட்டு
புடவைக்கு மேச்சிங் ஜாக்கெட்டு
உன்னால நிரம்புது என் பாக்கெட்டு
தேர்தல்ல நீ எடுத்த பல விக்கெட்டு
உன்னை எதுத்தவங்க உடைஞ்ச பக்கெட்டு
கிரிக்கெட்டு கிரிக்கெட்டு
உன் குடும்ப பிரச்சினைய நீ சரிக்கட்டு ! “
அடுத்து வைரக் கவிஞர் வைரமுத்து.
“ டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்த சிவப்புச் சூரியனே
உன்னைக் கண்டு ஓடுவான் கைபர் கணவாய் ஆரியனே
நீ டெண்டுல்கருக்கு தெரிவித்தது வாழ்த்து அல்ல… …
நீ தெரிவிக்காதது எதுவுமே வாழ்த்தும் அல்ல
உன் பெயரைச் சொன்னாலே பிட்ச் அதிரும்
ஸ்டெம்பு எகிரும் மைதானம் நடுநடுங்கும்
எல்லோரும் மேட்ச் ஃபிக்சிங்தான் செய்வார்கள்
நீ மைதானத்தில் உள்ளவர்களுக்கு கவர் கொடுத்து
மைதானத்தையே ஃபிக்ஸ் செய்தாய்.
மொத்தத்தில் நீ ஒரு புலிக்குட்டி
உனக்கு முன்னால் டெண்டுல்கர் ஒரு எலிக்குட்டி
அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கலைஞர்ஜி இன்னக்கி நீங்க டெண்டுல்கருக்கு வாழ்த்து சொல்லிருக்கீங்க. அதை நான் வரவேற்கிறேன். ஏன்னா நான் உங்களுக்கு வாழ்த்து சொல்றேன். நான் எப்போ வாழ்த்து சொல்வேன், எதுக்கு வாழ்த்து சொல்வேன்னு எனக்கே தெரியாது. ஆனா உங்களுக்கு டெய்லி நூறு வாழ்த்தாவது வரும்.
பாபாஜி கூட இமயமலேல்ல கிரிக்கெட் விளையாடுவார். நான் அடிக்கடி இமயமலேக்கு ஏன் போறேன்னு நெறய பேருக்கு தெரியாது. அங்கே கிரிக்கெட் விளையாடத்தான் நான் போறேன். நான் இமயமலைலே கிரிக்கெட் விளையாடும்போது கூட கலைஞர்ஜி எனக்கு போன் போட்டு கேம் எப்படிப் போகுதுன்னு கேட்பார்.
கலைஞர்ஜிக்கு கிரிக்கெட் மேலே இருக்க ஆர்வத்த பாத்து நான் கூட எந்திரன் படத்துல ரோபோ கிரிக்கெட் விளையாடுற மாதிரி ஒரு சீன் வெக்கலாம்னு யோசிச்சுருக்கேன். கிரிக்கெட் கேமே இந்தியாலேர்ந்து போனதுதான். நம்ம வேதத்துலேயும், உபநிஷத்துக்கள்ளேயும், கிரிக்கெட் பத்தி நெறய செய்தி இருக்கு.
கலைஞர்ஜிக்கு ஆண்டவனோட அருள் இருக்கறதாலத்தான் இன்னைக்கு டெண்டுல்கர பாராட்டிருக்கார்.
அடுத்து கமலஹாசன்.
மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள், டெண்டுல்கருக்கு பாராட்டு தெரிவித்ததை
பாராட்டுவதற்காக இன்று ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழா ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விழா. இந்த விழாவை நாங்கள் எங்கள் பேரப்பிள்ளைகளிடம் ஒரு தமிழன் எப்படி இன்னொரு கிரிக்கெட் வீரனை பாராட்டினான் என்று கூறி பெருமை படத் தக்கதொரு நிகழ்வு.
மராட்டிய மண்ணில் பிறந்த ஒரு வீரனை பாராட்டும் பண்பு கலைஞருக்கு
இருக்கிறது. அதற்காக நானும் தமிழன் என்ற முறையில் கர்வம் கொள்கிறேன்.
நான் பராசக்தி படம் பார்த்து தமிழ் கற்றுக் கொண்டேன். அந்தப் படத்தில்
ஒரு வசனம் வரும். நான் தென்றலைத் தீண்டியதில்லை. தீயைத் தாண்டியிருக்கிறேன் என்று. தாண்டியிருக்கிறேன் என்ற சொல்லாடலை கலைஞர் பயன்படுத்தியதே விரைவாக ரன் எடுக்கையில் க்ரீசை தாண்டுவதைத்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?
இந்தத் தமிழனின் பண்பை கண்டு நான் வணங்குகிறேன். கலைஞர் மட்டும்
அரசியலுக்கு வராமல் கிரிக்கெட் விளையாடப் போயிருந்தால், 50 ஓவர்கள்
மட்டுமல்லாமல், 100 ஓவர்களையும் இவரே விளையாடி 4 சதங்கள் அடித்திருப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
கருணாநிதி ஏற்புரை
என் அருமைத் தம்பி துரை முருகன் அவர்களே, அன்பு இளவல் ஜெகதரட்சகன் அவர்களே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே, கலைஞானி கமலஹாசன் அவர்களே, “கிரிக்கெட்டின் கில்லி” டெண்டுல்கர் அவர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே.
இந்த விழா, இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என்று நான்
எதிர்ப்பார்க்கவேயில்லை. நேற்று கூட, அமைச்சரவைக் கூட்டத்தை பாதியிலேயே முடித்து விட்டு, தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளை பார்த்து விட்டு இந்த விழா நடக்கும் அரங்கை பார்வையிட வந்தேன். அப்பொழுது, நாளை மாலைக்குள் இந்த வேலைகள் முடிவு பெறுமா என்ற அய்யம் எனக்கு இருந்தது.
ஆனால் தம்பி உடையான், படைக்கு அஞ்சான் என்ற வாக்கிற்கேற்ப என் தம்பிகள் இவ்விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். எனக்கு பாராட்டு விழா என்பதே பிடிக்காது. அந்த நேரத்திலே, வீட்டில் உட்கார்ந்து ”ராணி 6, ராஜா யாரு ?
” அல்லது எனக்கு மிகவும் பிடித்த ”மானாட மயிலாட” பார்க்கலாம் என்று
நினைத்திருந்தேன்.
ஆனால், அந்த நிகழ்ச்சிகளில் இருக்கும் அனைத்து நடனங்களும் இந்த
நிகழ்ச்சியிலும் நடைபெறும் என்று என் அன்புத் தம்பிகள் அளித்த
வாக்கிற்கிணங்கவே இவ்விழாவில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன்.
எனக்கா இப்படி பாராட்டு? ஒரு கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து
தெரிவித்ததற்காக ஒரு பாராட்டு விழாவா என்று சில அறிக்கை வீராங்கனைகள் அறிக்கை வெளியிடக் கூடும். அவ்வாறு அவர்கள் அறிக்கை
வெளியிடுவார்களேயானால் அது, நான் தமிழனாக, பிற்பட்ட சமுதாயத்தில்
பிறந்தேன் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவன்றி வேறு எதற்காக ? ஆனால்
அதையெல்லாம் கண்டு துவள மாட்டான் இந்தக் கருணாநிதி.
அறிஞர் அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும் (மானங்கெட்டவன், சூடு சுரணை இல்லாதவன் என்பதற்கு வேறு வார்த்தைகள்) என்பதை கற்றுக்
கொடுத்திருக்கிறார்.
டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தவுடன் அவருக்கு நான் வாழ்த்து
தெரிவித்தேன். அதைக் கண்ட என் அன்புத் தம்பிகள் துரை முருகனும்
ஜெகதரட்சகனும் இதற்கு ஒரு விழா எடுக்க வேண்டும் என்றார்கள். நான்
வேண்டாம், மக்கள் பணி இருக்கிறது என்று சொன்ன போதும் மிகவும்
வற்புறுத்தினார்கள்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கை ஏற்று இவ்விழாவிலே கலந்து கொள்ள சம்மதித்தேன்.
என் தம்பிகள், இவ்விழாவிற்கு, இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள அனைத்து
வீரர்களையும், அம்பயர்களையும் அழைக்க வேண்டும் என்ற அவாவினை
தெரிவித்தனர். அனைவரும் பொறாமைத் தீயில் கனன்று போவார்கள். இந்தத்
தமிழனுக்கா இவ்வளவு அங்கீகாரம் என்று சினந்து போவார்கள் என்பதாலேயே தம்பி டெண்டுல்கரை மட்டும் அழைத்தால் போதும் என்று தன்னடக்கத்துடன் தெரிவித்தேன்.
தம்பி விஜய் கில்லி படத்தில் எதிரிகளை துவம்சம் செய்தது போல, தம்பி
டெண்டுல்கர், எதிராளிகளின் பந்து வீச்சை துவம்சம் செய்ததாலேயே, அவரை
”கிரிக்கெட் கில்லி” என்று அழைத்தேன்.
அடுத்து, ஹாக்கி விளையாட்டு வீரர்களை பாராட்டலாம் என்று உத்தேசிக்கும்
போதே, என் தம்பிகள் அடுத்த விழாவுக்கு தயாராவது எனக்குப் புரிகிறது. என்
தம்பிகளின் அன்புக்கு தடை விதிக்க நான் யார் ?
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
விழா ஹைலைட்.
விழா நாயகன் கருணாநிதிக்கு தங்கத்தாலான பேட்டும், தங்கத்தாலான மூன்று ஸ்டெம்ப்புகளும் வழங்கப் பட்டன.
டெண்டுல்கருக்கு,
மத்துவபுரத்தில் ஒரு வீட்டு மனையும்,
25 கிலோ 'ஒரு' ரூபாய் அரிசியும்,
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும்,
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர் அட்டையும் வழங்கப் பட்டது.
பின் குறிப்பு.
கலைஞர் நூறு கோப்புகளில் கையொப்பம் இட்டதை பாராட்டும் விதமாகவும், 100 நாட்கள் தலைமைச் செயலகம் சென்றதை பாராட்டும் விதமாகவும், அடுத்தடுத்து விழாக்கள் நடைபெற உள்ளதால், விழா மேடையை பிரிக்க வேண்டாம் என்று உத்தரவிடப் பட்டது.
I wish I was a MAN/DAD!
3 years ago
No comments:
Post a Comment